புதுக்கோட்டை அருகே சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞரின் மூக்கை உடைத்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராசு. இவரது மகன் செல்வகுமார்( 26). இவர் சொந்தமாக செங்கல் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவரது நண்பரை சந்திப்பதற்காக விராலிமலை எம்.ஜி.ஆர் நகருக்கு சென்றுள்ளார்.
எம்.ஜி.ஆர் நகர் ரோட்டில் நின்று அவரது நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த வழியாக வந்த விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் தனி பிரிவு காவலர் சின்ராசு ஆகிய இருவரும் 'எதற்காக வெளியே நின்று கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு 'செயினை பறிச்சுகிட்டு போறவன், தண்ணி அடிச்சிட்டு போறவன எல்லாம் விட்டுடுவீங்க... வீட்டு வாசல்ல நின்னு பேசறவன வந்து விரட்டுவீங்க...' என்று பதில் சொல்லி இருக்கிறார் செல்வகுமார்.
அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் செல்வக்குமாரை எஸ்.ஐ கோவிந்தராஜ் தாக்கியுள்ளார். அதில் செல்வக்குமாருக்கு மூக்கில் ரத்தம் கொட்டியுள்ளது.
மூக்கில் ரத்தத்துடன் விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வகுமாரை மருத்துவமனைக்கு சென்ற எஸ்.ஐ கோவிந்தராஜ், 'நீ இங்கு தங்கக்கூடாது, உடனே கிளம்பு' என்று விரட்டியுள்ளார். இதில் மன வேதனை அடைந்த செல்வகுமார் நிருபர்களிடம் நடந்தவற்றை கூறி அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து அருகில் இருந்த செல்வகுமாரின் நண்பர் சுந்தரபாண்டி, "எந்த கோவில் திருவிழாவுக்கு சென்றாலும் அடாவடித்தனமாக காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் செயல்படுகிறார். அனைவரையும் அடிக்கிறார்" என்று கூறினார்.
இதேபோல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு விராலிமலை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளியான சங்கர் என்பவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் பத்மாவதி மற்றும் மூன்று காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பணிச்சுமை, மன அழுத்தம், குடும்ப சூழ்நிலைகள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் விரக்தியால் காவலர்கள் இப்படி பொதுமக்களிடம் ஏடாகூடமாக நடந்து கொள்ளும் சம்பவம் பெரும் பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது.
கட்டி வைத்து அடித்து இருவர் மரணத்தை ஏற்படுத்தியது, விசாரணைக்கு வந்த நபர்களின் பல்லை பிடுங்கியது என காவல்துறை தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவது சமூகத்துக்கு நல்லதல்ல.
- ஷானு