பட்டியலின மக்களுக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏராளமானவர்கள் திரண்டு வந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி மாவலி பாளையம் பச்சப்பட்டி அருந்ததியர் பகுதியைச் சேர்ந்த நுற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்கள் அனைவரும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். பின்னர், அது குறித்து அவர்கள் கூறும்போது, சேலம் மாவட்டம் சங்ககிரி மாவலி பாளையம், பச்சைப்பட்டி அருந்ததியர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக அந்த பகுதியில் கழிப்பிட வசதி இல்லை. பலமுறை மனு வழங்கிய பிறகு பொது கழிப்பிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, பூமி பூஜை போட்டும் செயல்படுத்தவில்லை.
காரணம், அப்பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் நல்லதம்பி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பட்டியலின மக்களுக்கு இங்கு கழிப்பிடம் எதற்கு? என கூறி மிரட்டி தடுத்து நிறுத்திவிட்டனர்.
தற்போது, பொதுக்கழிப்பிடம் இல்லாததால் பெண்கள், குழந்தைகள் இயற்கை உபாதை செல்வதற்கு வழியில்லாத அவல நிலை உள்ளது. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் பலரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுக்கு முன் பொதுக்கழிப்பிடம் கட்ட நிதி ஒதுக்கியும் பொது கழிப்பிடம் கட்டுவதை தி.மு.க பிரமுகர் நல்லதம்பி தடுத்து நிறுத்திவிட்டார்.
மேலும், இது குறித்து கேள்வி கேட்டால், பட்டியலின சமூகத்தை இழிவாக பேசி மிரட்டல் விடுகிறார். இது குறித்து காவல்துறை மற்றும் அரசு அதிகாரியிடம் முறைப்படி புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பொதுக் கழிப்பிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பட்டியல் இன சமூக மக்களை இழிவாகப் பேசி மிரட்டல் விடுத்த தி.மு.க பிரமுகர் நல்லதம்பி உள்ளிட்டோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.