விழுப்புரம் மாவட்டம், மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மூலம் மாதத் தவணையில் விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த நிறுவனத்துக்கு தவறாமல் தவணை பணம் செலுத்தி வந்த நிலையில் சிவக்குமார் சிரமம் அடைந்துள்ளார். இதனால் தனது பைக்கை விற்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி பைக்கை அதே பகுதியை சேர்ந்த லட்சாதிபதி என்பவரிடம் விற்றுவிட்டு மீதி தவணையை கட்டுமாறு கூறியுள்ளார். பைக்கை விலைக்கு வாங்கிய லட்சாதிபதி தொடர்ந்து மாதத்தவணை செலுத்தி வந்துள்ளார்.
ஆனாலும், பைக் கம்பெனிக்கு 50 ஆயிரம் ரூபாய் பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லட்சாதிபதி நேற்று பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.
நள்ளிரவில் அடையாளம் தெரியாத 2 இளைஞர்கள் லட்சாதிபதி வீட்டுக்கு வந்து பைக்கை எடுக்க முயன்றனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை திருடர்கள் என நினைத்து கூச்சலிட்டு கத்தியுள்ளனர்.
இதைக்கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் அங்கு ஓடி வந்து 2 இளைஞர்களையும் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அப்போதுதான் அவர்கள் இருவரும் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்பதும், பைக்குக்கு தவணை பணம் செலுத்தாததால் பறிமுதல் செய்ய வந்ததும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கிராம மக்கள் அந்த 2 இளைஞர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டு போலீசை வரவழைத்து ஒப்படைத்தனர்.
தற்போது அவர்கள் இருவரிடமும் கண்டாச்சிபுரம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.