பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: சுதந்திர தினத்தை புறக்கணித்த கிராம மக்கள்

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் வகையில் வீடுகள் தோறும் கருப்பு கொடியேற்றி கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்
வீடுகளில் கருப்பு கொடி
வீடுகளில் கருப்பு கொடி

இந்தியா முழுவதும் இன்று நாட்டின் 77வது சுதந்திர தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஒன்றான ஏகனாபுரத்தில் பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டது. இதற்கிடையில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் 385 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து விவசாய மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு, பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி இன்று ஆகஸ்ட் 15ம் தேதி திட்டமிட்டபடி சுதந்திர தினத்தன்று வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றியும், சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தும், பள்ளி மாணவர்கள் சுதந்திர தின விழாவை புறக்கணிக்க போவதாகவும் கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.

கிராமத்தில் கருப்பு கொடி
கிராமத்தில் கருப்பு கொடி

அதன் படி சுதந்திர தினமான இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் நாட்டின் 77வது சுதந்திர தினத்தை புறக்கணித்து, ஏகனாபுரம் கிராமம் முழுவதும் உள்ள வீடுகள் தோறும் கருப்பு கொடிகளை ஏற்றியிருந்தனர். அதையடுத்து இன்று நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தையும் ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணித்தனர். இதன் மூலியமாக பரந்தூர் புதிய பசுமைவெளி விமான நிலையத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பினை கிராம மக்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும் சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் முடிவை கைவிடுமாறு நேற்றைய தினம் போராட்டக் குழுவினர் மற்றும் கிராம மக்களிடையே மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இறுதியாக மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய நடைபயணம் மட்டும் கைவிடுவதாக போராட்டக் குழுவினரும், கிராம மக்களும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்திருந்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com