ஈ.சி.ஆர் ரோட்டில் ஆக்ரமிக்கப்பட்ட பர்மிய இந்தியர்களின் சொத்துகள் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆக்கிரமிப்பை அகற்றுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், காவல் துறை உதவியைப் பெற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடரலாம் என உத்தரவு
ஈ.சி.ஆர் ரோட்டில் ஆக்ரமிக்கப்பட்ட பர்மிய இந்தியர்களின் சொத்துகள் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ள 300 ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் மறுவாழ்வுக்காக 1968ம் ஆண்டு பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் துவங்கப்பட்டது. இந்த சங்கத்தின் சார்பில் சென்னை பாலவாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, அதில் 318 வீட்டுமனைகள் உருவாக்கி, சங்க உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த நிலத்தில் சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக கூறி, சங்கத்தின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தும்படி, தாம்பரம் தாசில்தாரருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், மாவட்ட ஆட்சியர், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தி, ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தக் கோரி, பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.போஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட அந்த நிலத்தில் வசிக்கும் சுமார் 300 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் வசிக்கும் 300 ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தி, நிலத்தை சங்கத்தின் வசம் ஒப்படைக்க தமிழக அரசுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும், ஆக்கிரமிப்பை அகற்றுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், காவல் துறை உதவியைப் பெற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடரலாம் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com