பரமக்குடியில் ஜாதி ரீதியாக செயல்படும் பேராசிரியர்களை மாற்றக்கோரி சக பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறையில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றியவர் அதியமான். இவர் மீது மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கல்லூரி முதல்வர் மேகலா மற்றும் ஆங்கிலத்துறை ரேணுகாதேவி ஆகியோர் விசாரணை செய்து வந்த நிலையில், கல்லூரியில் புகார் அளித்த மாணவி பரமக்குடி டிஎஸ்பி அலுவலகம் சென்று கௌரவ விரிவுரையாளர் அதியமானுக்கு எதிராக புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதியமான் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கல்லூரி முதல்வர் கல்லூரி கல்வி இயக்குநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படாத நிலையில்,வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உடற்கல்வி இயக்குநர் தூண்டுதலின்பேரில் ஆங்கிலத்துறையில் பணியாற்றக்கூடிய கௌரவ விரிவுரையாளர் காயத்திரி, அதியமான் மீது புகாரளித்துள்ள மாணவியிடம் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.இதில், கல்லூரி முதல்வரையும், ஆங்கிலம் வேதியியல் துறை தலைவர்களை ஜாதி ரீதியாக இழிவாக பேசியும், ஆங்கிலத் துறையில் பணியாற்றக்கூடிய பேராசிரியர்களை ஜாதியைச் சொல்லி அழைப்பதும், மாணவியையும், மாணவியின் தோழியையும் அதியமானுக்கு எதிராக ஜாதி ரீதியாக புகார் அளிக்க வற்புறுத்தி உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, ஆங்கிலத்துறைத் தலைவர் ரேணுகாதேவி கொடுத்த புகாருக்கு காவல்துறை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும், கல்லூரி நிர்வாகம் கவுரவ விரிவுரையாளர் காயத்ரியை பணி நீக்கம் செய்ய வேண்டும், இதற்கு உடந்தையாக இருந்த உடற்கல்வி இயக்குநர் பிரசாத் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி வளாகத்திற்குள் பேராசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காயத்ரி மற்றும் உடற்கல்வி இயக்குநர் பிரசாத் ஆகியவை பணியிடை நீக்கம் செய்யும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதை தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது