சிறையில் இருக்கும் நன்னடத்தை கைதிகள் பெட்ரோல் பங்க் நடத்துகிறார்கள். அதுவும் பெரும் லாபத்தில் நடத்துகிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்!
தமிழகத்தில் மிகப்பெரிய சிறைச்சாலைகள் சென்னை புழல் உட்பட ஒன்பது இருக்கிறது. இதில் வேலூர் சிறைச்சாலையும் ஒன்று. வேலூர் மத்திய சிறைச்சாலை இருக்கும் தொரப்பாடி பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் துவங்கப்பட்டு பெரும் லாபத்துடன் நடத்தப்படுகிறது என்பது மட்டுமல்ல இங்கு நிரப்பப்டும் பெட்ரோல் சரியான அளவில் இருக்கிறது, மைலேஜ் துல்லியமாக இருக்கிறது என்று மகிழ்கிறார்கள் இங்கு தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும் வாகனங்களுக்கு சொந்தக்காரர்கள்.
சிறைக்கைதிகள் குறிப்பாக நன்னடத்தை கைதிகள் தங்கள் நேரத்தை வீணாக்கக்கூடாது, சிறையில் வெட்டியாக பேசி மோதல்களில் ஈடுபடக்கூடாது என்று நீண்ட காலமாக பல்வேறு தொழில்கள் சிறைகளுக்குள்ளே கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் பங்க், பேக்கரி மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்து வெளியில் வைத்து விற்பனை செய்து லாபத்தை ஈட்ட சிறைத்துறையின் முழு பங்களிப்புடன் முற்பட்டு வருகின்றனர். அதில் ஒன்று பெட்ரோல் பங்க். 2014ம் ஆண்டு சிறைத் துறை தமிழக அரசின் உள்துறைக்கு அனுமதி கேட்டு கடிதம் பாதுகாப்பு கருதி மறுக்கப்பட்டது.
மீண்டும் சிறைத்துறை உள்துறையுடன் திட்ட வரைவுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரத்யேக அனுமதி வழங்கியது. இது இப்பொழுது தமிழகத்தில் ஐந்து சிறைச்சாலைகள் நடத்தி வருகிறது. அதில் வேலூர் ஒன்று. சென்னையில் நன்னடத்தை பெண் கைதிகள் பெட்ரோல் பங்க் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
இங்கு தொடர்ந்து பெட்ரோல் நிரப்பும் வேலூர் சாய்நாதபுரம், பாலசுப்பிரமணி, ’நான் இங்கு தொடர்ந்து பெட்ரோல் நிரப்பி வருகிறேன். துல்லியமாக இருப்பதுடன், நல்ல மைலேஜ் கிடைக்கிறது.
மேலும் நன்னடத்தை கைதிகளுக்கு தொடர் வாடிக்கையாளர்களாக இருப்பது அவர்களுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கிறது! என்றார். இது .நன்னடத்தைக் கைதிகளுக்கு கிடைத்த பெரும் பாராட்டு ஆகும்.
-அன்புவேலாயுதம்