'பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது' - செல்லூர் ராஜு பேட்டி

அ.தி.மு.க - தி.மு.க என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல். இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை
செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

'எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது' என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை துவரிமான் பகுதியில் சமுதாய கூடத்திற்கு மேற்கூரை அமைப்பதற்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, 'பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டத்தால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை. அந்த கூட்டத்திற்கு தலைவர் யார் என்பதுதான் எல்லோரிடமும் உள்ள போட்டி.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதைப்பற்றி பேசவே இல்லை. காரணம், ராகுலை பிடிக்கவில்லையா? காங்கிரஸ் உடன் உரசல் ஏற்பட்டுள்ளதா?

மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சி தலைமையில்தான் கூட்டணி என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது சரிதான். அ.தி.மு.கவும் அதைத்தான் சொல்கிறது.

பா.ஜ.க தலைமையில் கூட்டணி என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்வது, அவரது கட்சியை வளர்ப்பதற்காகத்தான். பின்னர் அவரே அந்த கருத்தை மாற்றிக் கொண்டுவிட்டார்.

தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்தே அமித்ஷா சொன்னார். கடந்த 2014 -ம் ஆண்டு லேடியா? மோடியா? என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டபோது அவருக்குத்தான் மக்கள் வாக்களித்தனர். அதுபோல எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து அவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள்.

அடுத்த தலைமுறை நடிகர் விஜய்தான். அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? ஒரு தமிழராக விஜய் தன்னுடைய சொந்த பணத்தை 13 மணி நேரம் நின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கொடுத்துள்ளார்.

யார் யாரோ தங்களை பிரதமர் என்றும், முதலமைச்சர் என்றும் சொல்லிக்கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது விஜய் ஏன் வரக்கூடாது? அவர் அரசியலுக்கு வருவதையும், வளர்வதையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம்.

அவர் எங்களுக்கு போட்டியாக வருவாரா என இப்போது சொல்ல முடியாது. ஆனால், எங்களுக்கு போட்டி தி.மு.க தான். அ.தி.மு.க - தி.மு.க என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல். இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை.

எத்தனையோ கட்சிகள் வரும், போகும். தி.மு.க - பா.ஜ.க என்று பா.ஜ.க-வினர் சொன்னால் எடப்பாடி பழனிசாமி விடமாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அ.தி.மு.க-தான்.

எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது. மோடி பிரதமராவார் என யாராவது நினைத்தார்களா? அவர் முதலமைச்சராக ஆவார் என எதிர்பார்த்தார்களா? அவர் ஒரு சாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டராக இருந்தவர். அவர் தனது உழைப்பால் உயர்ந்தார். அதுபோல எடப்பாடி பழனிசாமியும் உயர்வார்' என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com