எதிர்மறை விமர்சனங்களை கூகுள் ஆன்லைனில் வெளியிடுவது அவதூறு அல்ல - சென்னை ஐகோர்ட் உத்தரவு

சேவையைப் பற்றி கூகுளில் எதிர்மறையான விமர்சனங்களை எழுதுவது, அவதூறாகக் கருத முடியாது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

எதிர்மறையான விமர்சனங்களையும், கருத்துக்களையும் கூகுள் ஆன்லைனில் வெளியிடுவது அவதூறு அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் சாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், ஒரு வழக்கு தொடர்பாக வழக்கறிஞரிடம் இருந்து கிருத்திகா சில சட்டச்சேவைகளைப் பெற்றதாகவும், பின்னர் கூகுள் ரிவியூவில் வழக்கறிஞருக்கு எதிராக எதிர்மறையான கருத்துக்களையும், விமர்சனத்தைப் பதிவிட்டுள்ளார்.

வழக்கறிஞரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட கிருத்திகா, அவரது தந்தை செந்தில் மற்றும் கூகுள் நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட கிருமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை நடுவர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் கிருத்திகா தரப்பில், வழக்கறிஞரிடம் இருந்து பெற்ற சேவைகள் குறித்து கிருத்திகா தனது கருத்தை கூகுளில் தெரிவித்ததாகவும், அதில் வழக்கறிஞர் வழங்கிய சேவைகள் திருப்திகரமாக இல்லை என்பதால் அவ்வாறு கருத்து பதிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சிவஞானம் பிறப்பித்த உத்தரவில், வழக்கறிஞரின் சேவைகள் குறித்த விளம்பர விமர்சனத்தை ஆன்லைனில் வெளியிடுவது தவறா? அல்லது அவதூறானதா? என முடிவு செய்ய வேண்டும்.

இலவசமாக சேவையை வழங்கக்கூடிய கூகுள் சேவையில், ஒருவரிடம் இருந்து பெற்ற சேவையை பற்றி எதிர்மறையான விமர்சனங்களை எழுதுவது மற்றும் சேவை வழங்கிய கூகுள் நிறுவனத்தின் அவதூறு நடவடிக்கையாக கருத முடியாது.

இன்டர்நெட் என்பது ஒரு இலவச சேவை மையம், இது ஒரு முக்கியமான வெளிப்பாடு மற்றும் தகவல்தொடர்புக்கான மையம், பெறப்பட்ட சேவைகளைப் பற்றி கூகுள் ரிவியூவில் கருத்துக்களை வெளிப்படுத்துவது அவதூறுக்கு இடமளிக்காது.

சேவையைப் பற்றி கூகுளில் எதிர்மறையான விமர்சனங்களை எழுதுவது, அவதூறாகக் கருத முடியாது.அவ்வாறு அவதூறாக கருதினால் அது இந்திய அரசியலமைப்பு 19(1)(a) நமக்கு வழங்கிய கருத்து சுதந்திரத்தை அது பாதிக்கும் என உத்தரவிட்டுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com