மதுரை மாவட்ட ஓய்வுபெற்ற ஆவின் பணியாளர்கள் நலச்சங்க தலைவரும், தி.மு.க தொழிற்சங்கத் தலைவராகவும் உள்ளவர் மானகிரி கணேசன். இவரது பெயரில் மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த போஸ்டரில் மானகிரி கணேசன், ‘வணக்கத்திற்குரிய ஒன்றிய அரசே! தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களுக்காக இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கடைகோடி மக்கள் வரை சேர வேண்டும் என விரும்பி செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டு வர அரும்பாடுபட்டு வருகிறார். தற்போது தமிழக ஆளுநராக இருந்து வரும் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக அரசுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறார்.
ஆகவே ஒன்றிய அரசே, உடனடியாக தமிழ்நாட்டில் இருந்து 27-06-23க்குள் தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும். அவ்வாறு, மாற்றாவிட்டால் 28-06-2023 அன்று மதுரை சிம்மக்கலில் உள்ள எங்களது அய்யா கலைஞர் சிலை முன் தீக்குளித்து சாவேன் என தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
ஆளுநரை மாற்றக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்து தி.மு.க நிர்வாகி ஒட்டியிருக்கும் இந்த போஸ்டர்கள் மதுரையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.