கைதான TTF வாசனுக்கு 15நாள் சிறை : ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு

ஆபத்தை விளைவிக்கும் வகையில் இரு சக்கர வாகனத்தை இயக்கி விபத்தான நிலையில், டிடிஎஃப் வாசனை கைது செய்தது காவல்துறை.
டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்

பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் சென்னையிலிருந்து-மகாராஷ்டிராவிற்கு தனது நண்பரான அஜித் என்பவருடன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றபோது ஒருவரை ஒருவர் முந்தி பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் பயணத்துக்கான அந்தச் சாலையில் அதிவேகமாக பைக்கில் சென்றபடி முன்சக்கரத்தை உயரத் தூக்கியபடி செல்லும் வீலிங் சாகசத்தையும் செய்தவாறு அவர் சென்றுள்ளார்.

அவ்வாறு வீலிங் செய்யும் போது எதிர்பாராதவிதமாக வாசனின் பைக் விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டினை இழந்த பைக் அதிவேகமாக சாலையோரத் தடுப்பில் மோதி நிலைகுலைந்து தூக்கி வீசப்பட்டது. அந்த விபத்தில் டிடிஎஃப் வாசன் பலத்த காயம் அடைந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக டிடிஎஃப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் பாலுச்செட்டி சத்திரம் காவல்துறையினர்.

டிடிஎஃப் வாசன் கைது
டிடிஎஃப் வாசன் கைது

ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் இயக்கியதாகவும், வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, பிறருடைய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாது ஜாமீனில் கூட வெளியே வர முடியாதபடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் டிடிஎஃப் வாசன் தொடர்ந்து இது போல் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை இயக்கி வருவதால் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது.

கைதான TTF வாசனுக்கு அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவரை 15நாள்கள் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com