ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளம் புனரமைப்பு: கள ஆய்வில் அதிரடி காட்டிய அதிகாரிகள்

சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் குளம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகிறது.
ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளம் புனரமைப்பு
ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளம் புனரமைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுங்குவார்சத்திரம் பகுதியில் விநாயகர் கோயில் குளம் உள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு வணிக வளாகங்கள் இருந்து வந்தது. மேலும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் குளத்துக்கு சென்று மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டு வந்தது. பின்னர் நீர் பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

இதையடுத்து பாழடைந்து காணப்பட்ட குளத்தை சீரமைத்து தர கோரிக்கை வைத்து வந்தனர். இதனை அடுத்து தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்துதல், கரை பலப்படுத்துதல் போன்ற புனரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

கள ஆய்வு பணியில் அதிகாரிகள்
கள ஆய்வு பணியில் அதிகாரிகள்

இப்பணிகளை ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், திட்ட இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதி மக்கள் திரண்டு வந்து குளம் பணிகளை செய்த பின் கரையை சுற்றி மரக்கன்றுகளை நடவு செய்து, நடைபாதை அமைத்து தர கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து சந்தவேலூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிக்க கூடிய பெண்களிடம் செய்முறை விளக்கம் கேட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

புதிய கட்டிடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்
புதிய கட்டிடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்

பின்னர் மொளச்சூர் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடம், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கக்கூடிய சிகிச்சை முறைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்து கள ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com