செங்கல்பட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் நேற்று கல்பாக்கம் பகுதியை சேர்ந்த 3 பேர் மது வாங்க வந்துள்ளனர். பின்னர் மது பாட்டில்களை வாங்கி இருசக்கர வாகனத்தில் வைத்தபோது செங்கல்பட்டு நகர காவல் நிலைய போலீஸ்காரர்கள் 2 பேர் அங்கு வந்துள்ளனர்.
பின்னர், அவர்கள் மது பாட்டில்களுடன் சேர்த்து இருசக்கர வாகனத்தை பறித்ததாக கூறப்படுகிறது. அதற்கு மது பிரியர்கள், ‘நாங்களும் அரசு ஊழியர்கள்தான்’ என கூறியுள்ளனர்.
உடனே போலீசார் ‘எங்களிடமே சட்டம் பேசுகிறாயா? பார்.. இந்த வண்டியை ஏலத்துக்கு அனுப்புறேன்’ என கூறி ஆபாசமான வார்த்தைகளால் அவர்களை திட்டி, ஒரு போலீஸ்காரர் மது பாட்டிலுடன் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றுள்ளார்.
இதனால் டென்ஷன் ஆன அருகில் இருந்த மது பிரியர்கள் மற்றொரு போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் உடனடியாக இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற காவலருக்கு போன் செய்து ‘என்னை பொதுமக்கள் சூழ்ந்துவிட்டனர்’ என கூறி மீண்டும் அவரை அழைத்துள்ளார்.
உடனே இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற போலீஸ்காரரும் அங்கு வந்துள்ளார். பின்னர் அவர்கள் பறித்த மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை திருப்பி ஒப்படைத்துவிட்டு நகர முயன்றுள்ளனர்.
அப்போது மது வாங்க வந்தவர், ‘பொதுமக்களிடம் காவல் துறையினர் அதிகாரத்தை காட்டுவார்கள். பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கும் டாஸ்மாக் ஊழியர்களிடம் எதுவுமே கேட்க மாட்டார்கள்’ என கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நகர காவல் உதவி ஆய்வாளர் ராஜா அந்த மதுப்பிரியரை கண்மூடித்தனமாக தாக்கி விரட்டினார். இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மதுப்பிரியர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் ராஜா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ராஜா விளக்கம் அளிக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவிட்டுள்ளார்.