நாகர்கோவில்: மீனவர் வலையில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுகள் - இறுதியில் என்ன நடந்தது?

நாகர்கோவில் மீனவர் வலையில் கட்டுக்கட்டாக போலி ரூ.2000 நோட்டுகள் சிக்கிய விவகாரம் பொதுமக்கள் மற்றும் போலீசார் மத்தியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலி ரூபாய் நோட்டு கட்டுகள்
போலி ரூபாய் நோட்டு கட்டுகள்

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அவகாசம் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம், வேம்பனூர் குளத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் வலைவீசி மீன்களை பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஒரு பிளாஸ்டிக் பொட்டலம் கிடைத்தது. அதில், ஏராளமான 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள் நனைந்த நிலையில் இருந்தன. சமீபத்தில் 2 ஆயிரம் நோட்டுகளை ஆர்.பி.ஐ திரும்ப பெற்றதால் யாரோ பதுக்கி வைத்திருந்த 2000 ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசி இருக்கலாம் என காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது ரூபாய் கட்டுகள் மீது கனரா பேங்க் ஸ்லிப்கள் இருந்தாலும் பணத்தாள் மீது ‘சில்ரன் பேங்க் ஆப் இந்தியா’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் பணக்கட்டுகளை பார்வையிட வந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியில் சினிமா ஷூட்டிங் நடந்தது தெரிய வந்தது. எனவே, சினிமா ஷூட்டிங் முடிந்த பிறகு பணக்கட்டுகளை வீசி எறிந்து சென்று இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com