ராமநாதபுரம்: கேட்பாரற்று நின்ற காரில் 150 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீஸ் அதிரடி
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கஞ்சா, பெட்ரோல், அபின், ப்ரவுன்சுகர் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் ராமேஸ்வரம் பகுதியில் தீவிரமான சோதனையை மேற்கொண்டனர். அப்போது ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமான கார் பார்க்கிங் இடத்தில் பூட்டப்பட்ட நிலையில் சந்தேகப்படும்படியான கார் ஒன்று நீண்ட நேரமாக நிற்பதை சி.சி.டி.வி கேமரா மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.
ஜார்க்கண்ட் மாநில பதிவு எண் கொண்ட அந்த காரை எடுத்துச் செல்ல நீண்ட நேரமாகியும் யாரும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காருக்குள் ஆயுதம் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் இருக்கலாம் என சந்தேகப்பட்டனர்.
இதையடுத்து அந்த கார், மண்டபம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் முன்னிலையில் காரின் கதவுகளை உடைத்து பார்த்தபோது அந்த காரினுள் 79 கஞ்சா பார்சல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனையில் மொத்தம் 150 கிலோ இருப்பது தெரிய வந்தது. உடனே அவற்றை கைப்பற்றிய போலீசார் அந்த காரின் உரிமையாளர் மற்றும் கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.