உயிரிழந்த போலீஸ்காரர்.. இழப்பீடு தராமல் பெற்றோரை அலைக்கழிக்கும் காவல்துறை.. சக காவலர்களின் நெகிழ்ச்சி செயல்

காவல்துறையில் பணிபுரிந்து உயிரிழந்த மகனின் இறப்புக்கு இழப்பீடு கேட்டு கடந்த 16 ஆண்டுகளாக அலைந்த பெற்றோருக்கு, சக காவலர்கள் உதவி புரிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேந்திரன் பெற்றோருக்கு உதவிய சக காவலர்கள்
ராஜேந்திரன் பெற்றோருக்கு உதவிய சக காவலர்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தை சேர்ந்த முதியவர் கருப்பையா(80) இவரது மனைவி இருளாயி(70). இவர்களுக்கு இரண்டு மகள்கள், மூன்று மகன்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில் கடைசி மகன் ராஜேந்திரன் மட்டும் திருமணமாகாமல் இருந்துள்ளார்.

பிளஸ் டூ படித்த ராஜேந்திரன் 2006ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து மதுரையில் பணியாற்றி விட்டு, அதன் பின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு மாற்றப்பட்டார். அப்போது பணியில் இருந்த போது 2007ம் ஆண்டு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பெற்றோர்கள் கடன் வாங்கி தனது மகனின் மருத்துவ செலவை கவனித்து வந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தார். அப்போது அரசின் சார்பில் எவ்வித உதவியும் ராஜேந்திரன் குடும்பத்திற்கு வழங்கப்படவில்லை. மேலும் உயிரிழந்து போன மகனின் இழப்பீடு நிலுவை தொகை பணத்தை உடனே வழங்க வேண்டும் என அப்போது இருந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர்.

16 வருடங்களாக தற்போது வரை போராடி வருகின்றனர் கருப்பையா இருளாயி தம்பதியினர். மற்ற பிள்ளைகள் கவனிக்காமல் விட்ட நிலையில் ராஜகம்பீரத்தில் உள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் தங்கி இருந்து அன்றாடும் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் இருந்து வருவதாக சில மாதங்களுக்கு முன் செய்தி வந்தன.

அதன் அடிப்படையில் 2006ம் ஆண்டு உயிரிழந்த ராஜேந்திரனுடன் பணிபுரிந்த காவலர்கள் ஒன்று சேர்ந்து கருப்பையா-இருளாயி தங்கியிருந்த பாழடைந்த வீட்டை 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு பராமரிப்பு செய்தும், 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் கருப்பையா வாங்கிக் கடனை செலுத்தியும், தற்போது செலவுக்காக அவர் கையில் 20 ஆயிரம் ருபாயை கொடுத்தும், வீட்டிற்க்கு தேவையான காய்கறிகள், பலசரக்கு சாமான்களை, கருப்பையா இருளாயி தம்பதிக்கு வழங்கியுள்ளனர்.

இறந்த காவலருடன் 2006ம் ஆண்டு பணிபுரிந்த காவலர்கள் அவரது வீடு தேடி வந்து செய்த உதவி, நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com