கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள கீழ் செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் வீரசேகரன் (31). இவர், மயிலாடுதுறையில் ஆயுதப்படை காவலராக வேலை செய்து வந்தார்.
இவருக்கும், நெய்வேலி அருகே உள்ள மாங்கூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு குறிஞ்சிப்பாடி கருமாத்துறான் வீதியில் வீரசேகரன் மனைவியுடன் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார். இவரது மனைவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீரசேகரனின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீரசேகரன் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். மயிலாடுதுறையில் பணி முடிந்து வீரசேகரன் நேற்று வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
பின்னர் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கியுள்ளார். இன்று காலை 7 மணியளவில் அவரது பெற்றோர்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளனர். அவர், கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை திறந்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்குப் போட்டு வீரசேகரன் தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதைப் பார்த்து கதறி அழுத பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுபற்றி குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரசேகரன் குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கணவர் இறந்தது குறித்து அவரது மனைவி வீட்டில் தகவல் தெரிவித்துவிட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூரில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பு:
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் தற்காலிகமானதுதான். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் உருவானாலோ அதில் இருந்து மீண்டும் வர கீழ்க்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தொண்டு நிறுவனம்:
எண்-11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண்: 044 24640050 மற்றும் 044 2464 0060