கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பழைய ஸ்டேட் பேங்க் காலனி தெருவை சேர்ந்தவர் பெர்ஷியஸ் அலெக்சாண்டர். இவரது மாலதி. தம்பதி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தங்களது 2 மகள்களுடன் வீட்டுக்குள் தங்களையே சிறைவைத்துக் கொண்டு தனிமையில் வசிப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையில் இன்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது வீடு உள்பக்கமாக பூட்டிய நிலையில் இருந்ததால் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளனர். அவர்கள் தரப்பில் இருந்து யாருமே சரிவர பதில் தெரிவிக்கவில்லை. மேலும், வெளியில் இருந்து கூப்பிட்டும் உள்ளிருந்து பதில் எதுவுமே வராததால் தீயணைப்புத் துறையினர் வீட்டுக்குள் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வழக்கறிஞர் பெர்சியஸ் அலெக்ஸாண்டர், அவரது மனைவி மாலதி மற்றும் பட்டப் படிப்பு முடித்த 2 மகள்கள் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப்பின் முரணான பதில்களை தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தங்களை கொல்ல மர்ம நபர்கள் மறைந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் ‘நாங்கள் நேரடியாக பிரார்த்தனையின்போது இயேசுவிடம் பேசிக்கொண்டு இருக்கிறோம்’ என அவர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தாங்கள் நலமாக இருப்பதாகவும், தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
எனவே போலீசார் அவர்களிடம் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் அவரது உறவினர் ஒருவர் ‘இதுபோன்று அத்துமீறி வீட்டில் புகுந்து மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் என்றும் பாராமல் விசாரித்தது கண்டிக்கத்தக்கது’ என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.