நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அலவாய்ப்பட்டி ஊராட்சியில் வெள்ளை பிள்ளையார் கோயில் பகுதியில் வசிப்பவர் கதிர்வேல். இவரது மகன் கண்ணன். தனியார் பள்ளி ஆசிரியர்.
இவர், ஆன்மிகவாதி ஆவார். இவருடைய பூர்வீக வீடு மற்றும் தறிப்பட்டறைகளை கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாத்து வருகிறார்.
இந்நிலையில் அலவாய்ப்பட்டி ஊராட்சியின் அ.தி.மு.க 3வது வார்டு கவுன்சிலர் நல்லம்மாள் என்பவருடைய கணவர் ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுக்கு முன் கண்ணன் என்பவர் வீட்டின் அருகே நிலம் வாங்கிய நிலையில் கண்ணனுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து 2 அடி சேர்த்து வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார்.
இதுதொடர்பாக, கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரச்னை சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அலவாய்ப்பட்டி ஊராட்சி தலைவர் ராஜா என்பவர் தலைமையில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து பேசப்பட்டு நிலத்தை சர்வேயர் வைத்து அளந்த பின்பே வீடு கட்ட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கான தொகையை வெண்ணந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் கண்ணன் கட்டியுள்ளார். ஆனாலும், சர்வேயர் நிலத்தை அளந்து தராத நிலையில் அ.தி.மு.க கவுன்சிலரின் கணவர் அராஜகப் போக்கை அரங்கேற்றி உள்ளார்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி மீண்டும் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட துவங்கிய ரவிச்சந்திரனிடம், ‘ஏன் இப்படி அராஜகம் செய்கிறாய்?’ என தட்டிக் கேட்ட கண்ணன் ‘கடவுளிடம் முறையிடுகிறேன்’ எனக்கூறி தன் கையில் இருந்த சங்கை ஊதியபடி சென்றுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் மற்றும் அவருடைய மகன் அருள்மணி ஆகியோர் சேர்ந்து கீழே கிடந்த செங்கலை எடுத்து கண்ணனை சரமாரியாக தாக்கியதில் அவரது உதடு மற்றும் பற்கள் சிதைந்துள்ளது.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கண்ணனை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கண்ணன் கூறும்போது ‘அ.தி.மு.க கவுன்சிலரின் கணவர் ரவிச்சந்திரன் கடந்த 40 ஆண்டுகளாக வெள்ளைபிள்ளையார் கோயில் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு நீதிமன்ற ஆணையுடன் அகற்றப்பட்ட நிலையில் அதே இடத்தில் தற்போது ஆக்கிரமித்து பணியார கடை, இட்லி விற்பனை செய்து வருகிறார்.
மேலும் அ.தி.மு.க பிரமுகர்களின் உதவியுடன் பல புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து விற்பனை செய்து வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இது சம்பந்தமான வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ள நிலையில் தற்போது என்னுடைய நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர் மீது கடுமையான வழக்கு பதிந்து சர்வேயர் மூலம் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இதற்கிடையே கண்ணன் தாக்கப்பட்டது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து தாக்குதல் நடத்திய கவுன்சிலர் மகன் அருள்மணியை வெண்ணந்தூர் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்திருக்கின்றனர்.