மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் வழக்கறிஞரை இன்னொரு வழக்கறிஞர் காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா பெரிய கொக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (34). மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் அப்புக்குட்டி என்கிற பிரசன்னா. இவர்கள் இருவரும் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஒரு வழக்கு தொடர்பாகப் புகார் அளிக்க மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது வழக்கு தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தபோது சதீஷ்குமார், பிரசன்னா ஆகியோர் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு கட்டிப் புரண்டுள்ளனர். அப்போது பிரசன்னா தனது காலில் அணிந்திருந்த காலணியைக் கழற்றி சதீஷ்குமாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ந்துபோன எஸ்.பி அலுவலகப் போலீசார் இருவரையும் சமாதானம் செய்தனர். சக வழக்கறிஞரால் தாக்குதலுக்குள்ளான சதீஷ்குமார் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் அப்புக்குட்டி என்கிற பிரசன்னா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட பொதுமக்களோ ’எஸ்.பி ஆபிசிலேயே அடிச்சுக்கிறாங்க. போலீஸ்சுங்கிற பயமெல்லாம் எப்பவோ விட்டுப்போச்சு’ என்கிறார்கள், நமுட்டுச்சிரிப்புடன். தற்போது எஸ்.பி நிஷா ஒரு டிரெயின்ங்குக்காக விடுமுறையில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்.விவேக் ஆனந்தன்