'மலை உச்சியில் முகாமிட்ட போலீஸ்' - கல்வராயன் மலையில் நடந்தது என்ன?

கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் 1500 கிலோ வெள்ளம், 450 லிட்டர் கள்ளச்சாராயம், 900 லிட்டர் சாராய ஊரல்கள் ஆகியவற்றை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
 கள்ளச்சாராய  ஊரல்களை அழிக்கும் போலீசார்
கள்ளச்சாராய ஊரல்களை அழிக்கும் போலீசார்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து சுமார் 24 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி இறந்தவர்களின் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

இந்தச்சூழலில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டையைத் தொடங்க தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன் பேரில் வட மாவட்டங்களுக்கு செல்லும் கள்ளச்சாராயத்திற்குப் புகலிடமாக திகழ்வது கல்வராயன்மலை. இந்த மலை சுமார் மூன்று மாவட்டங்களின் எல்லையாக அமைந்துள்ளது. இங்கிருந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மலை சாராயம் எனும் பெயரில் கடத்திச் சென்று விற்பனை நடந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கள்ளச்சாராய விற்பனையை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையே விளங்கி வருகிறது.

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மற்றும் சென்னை வடக்கு மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் ,கள்ளக்குறிச்சி மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் 6 காவல் ஆய்வாளர்கள், 10 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் 7 பிரிவுகளாக அதிரடியாகப் பிரிந்து சென்று கல்வராயன்மலை பகுதியில் அதிரடியாகச் சாராய வேட்டையைத் தடுக்க நேற்று புறப்பட்டுச் சென்றனர்.

இந்த மலைக் கிராமங்கள் நாம் கீழே இருப்பது போல் சாதாரணமாக நடமாட முடியாத அளவில் இருக்கும். ஆங்காங்கே பள்ளங்கள் மேடுகள் இருப்பதால் சாராயம் காய்ச்சுபவர்கள் மலை அடிவாரத்திற்கு நடைபாதை போல் இருக்கும் ஒற்றையடிப் பாதையில் இருசக்கர வாகனத்தில், லாரி டியூப்பில் சாராயத்தைக் கடத்தி செல்வார்கள்.

இப்படிக் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டுமானால் மலையில் ஆங்காங்கே சாராயம் காய்ச்சுவதை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வந்த போலிஸ் டீம் பல்வேறு இடங்களில் காய்ச்சி வைக்கப்பட்டிருந்த கள்ளச் சாராயத்தைப் பேரலிலேயே வெட்டி கீழே ஊற்றி அதனைத் தீயிட்டு அழித்துள்ளனர்.

கள்ளச்சாராய  ஊரல்களை தீயிட்டு அழிக்கும் போலீசார்
கள்ளச்சாராய ஊரல்களை தீயிட்டு அழிக்கும் போலீசார்

இந்த தேடுதல் வேட்டையில் 1500 கிலோ வெள்ளம், 450 லிட்டர் கள்ளச்சாராயம், 900 லிட்டர் சாராய ஊரல்கள் ஆகியவற்றை அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். சாராய வியாபாரி தங்கராசு என்பவரைக் கைது செய்துள்ளனர். மேலும் பலரைத் தேடி வருகின்றனர். மலை மீது கேம்ப் போட்டுத் தங்கித் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருவது ஆச்சரியத்தை உண்டாக்கி வருகிறது. இச்சம்பவம் சாராய வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com