கல்குவாரி குட்டையில் காவலர் சடலம் மீட்பு - கொலையா? என போலீஸ் விசாரணை

சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த காவலர் பிரசாந்த்
உயிரிழந்த காவலர் பிரசாந்த்

வேட்டவலம் அருகே கல்குவாரி குட்டையில் காவலர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பெரியார் தெருவை சார்ந்த பிரசாந்த் (வயது 28). இவர் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள வெள்ளவேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு வேட்டவலம் பகுதியைச் சார்ந்த கௌரிசங்கரியுடன் திருமணம் நடந்து இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் வேட்டவலம் ஆனைகட்டி சாவடி கல்குவாரி அருகே செருப்பு மற்றும் செல்போன் இருந்ததை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து யாரேனும் கல்குவாரி குட்டையில் மூழ்கியுள்ளார்களா? என தீயணைப்புத்துறை உதவியுடன் தேடினர்.

சில மணி நேரம் தேடலுக்குப் பிறகு ஆண் சலத்தை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இறந்து போனது வெள்ளவேடு காவல் நிலையத்தில் பணியாற்றும் பிரசாந்த் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரசாந்த் எதற்காக இப்பகுதிக்கு வந்தார் எனவும் கடன் மற்றும் குடும்ப பிரச்சினை ஏதேனும் இருப்பதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com