கடலூர்: பேருந்து நிறுத்தத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிக்கிய இளைஞர்

பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் செயின் பறித்த இளைஞர் வசமாக சிக்கினார்.
சிக்கிய இளைஞர்
சிக்கிய இளைஞர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கோழியூர் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசி. இவர், பெண்ணாடத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், வழக்கம்போல வேலைக்கு செல்வதற்காக கோழியூர் பேருந்து நிறுத்தத்தில் கலையரசி பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் திடீரென கலையரசி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயினை பறித்துள்ளனர்.

இதை சற்றும் எதிர்பாராத கலையரசி செயினை கையில் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டு கத்தியதால் பாதி செயினை பறித்துக்கொண்டு தப்ப முயன்றவர்களை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓட்டம் பிடித்தார்.

உடனே பிடிபட்ட நபரை மின் கம்பத்தில் கட்டிவைத்து அங்கிருந்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திட்டக்குடி போலீசார் அவரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என தெரிந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய நபர் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றதால் இப்பகுதியில் பெண்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் திட்டக்குடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com