நெல்லை: கோயில் திருவிழாவில் ஜாதி அடையாளங்களுடன் வந்தவர்களை அமுக்கிய போலீஸ்: காரணம் என்ன?

சாதிய மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்ட இந்த சம்பவத்தை அடுத்து போலீஸ் தடியடி நடத்த வேண்டியதாயிற்று.
நெல்லையப்பர் கோயில்
நெல்லையப்பர் கோயில்

நெல்லையின் அடையாளமாக விளங்கும் நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா மிகவும் பிரசித்தம். இந்த ஆண்டு கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படியின் படி அச்சமுதாய மக்கள் திருவிழா நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு தேரின் மீது தேவேந்திர குல சமுதாய கொடியை சிலர் பறக்க விட்டதால் பெரும் டென்சன் உருவானது.

சாதிய மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்ட இந்த சம்பவத்தை அடுத்து போலீஸ் தடியடி நடத்த வேண்டியதாயிற்று. எனவே இந்த ஆண்டு கோயில் திருவிழாவின் போது ஜாதிய சின்னம், அடையாளம், கொடி ஆகியவற்றைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று சி.என்.கிராமத்தைச் சேர்ந்த வக்கீல் மாதவன் கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு கொடுத்தார். அவரிடம் பேசினோம். அவர் கூறுகையில், ’’தென்மாவட்டங்களில் தேவர், தேவேந்திரர், நாடார் சமுதாயங்கள் மெஜாரிட்டியாக வாழ்கின்றன.

இந்த சமுதாயங்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இதனாலேயே பல கொலைகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு நெல்லையப்பர் கோயில் திருவிழாவின் போது, தேவர் குல மக்கள் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் நடிகர் கார்த்திக் படங்கள் தவிர, சாதி பேனர் மற்றும் கொடிகளை கட்டினர். பதிலுக்கு தேவேந்திர குல மக்கள் இம்மானு வேல் சேகரன், டாக்டர் கிருணசாமி கட் அவுட்டுகளை வைத்தனர். நாடார் சமுதாயத்தினர் கராத்தே செல்வின், ராக்கெட் ராஜா படங்களை வைத்தனர்.

வக்கீல் மாதவன்
வக்கீல் மாதவன்

இதனால் மூன்று சமுதாயங்களிடையே கடுமாயான முறுகல் நிலை ஏற்பட்டது. மிகவும் கஷ்டப்பட்டு போலீஸ் நிலைமையை கண்காணித்தது. எனவே இந்த ஆண்டு நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழாவின் போது சமுதாய அடையாளங்களை தடை செய்யவேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை தொடர்பு கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து நான்கு ரதவீதிகளிலும் கட்டப்பட்டிருந்த சர்சைக்குரிய பேனர்கள் அகற்றப்பட்டன.

கைகளில் சாதிச் சின்னங்களை பச்சை குத்தியவர்கள், கையில் சாதிய கயிறுகளை கட்டி கொண்டு வந்தவர்களை போலீஸ் அமுக்கி அள்ளிச் சென்றது. இதனால் தேரோட்டம் அமைதியாக நடைபெற்றது. சாதிய சின்னங்களுடன் பிடிபட்டவர்கள் தேரோட்டத்திற்குப் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்றார் சப்- இன்ஸ்பெக்டர் ஆடிவேல்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com