ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பஸ் நிலையம் பின்புறப் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (37). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சுமதி. தம்பதியின் மகள் ஹேமா ஸ்ரீ. கடந்த 2016 ஆம் ஆண்டு ஹேமா ஸ்ரீ பிறந்த 2 மாதங்களிலேயே சுமதி உடல் நலக்குறைவால் காலமானார்.
இதன் பிறகு சந்திரசேகர் திருவண்ணாமலை மாவட்டம் காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டார். சந்திரசேகர், ராதிகா தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தனது முதல் மனைவிக்கு பிறந்த ஹேமஸ்ரீ-க்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறி சந்திரசேகர், மனைவி ராதிகா ஆகியோர் ஹேமா ஸ்ரீயை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஹேமா ஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சோளிங்கர் போலீசார் சந்தேக வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஹேமா ஸ்ரீ மரணத்தில் அதிரடித் திருப்பமாக பிரேத பரிசோதனை அறிக்கையில் முகத்தை துணியால் அழுத்தி மூச்சுத்திணறல் ஏற்படுத்தியதால் சிறுமி இறந்தது தெரியவந்தது.
இதுதொடர்பான தகவலறிந்ததும் ராணிப்பேட்டை எஸ்.பி கிரண் ஸ்ருதி, சிறுமி மரண வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் சிறுமி ஹேமா ஸ்ரீ-யின் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சந்திரசேகரின் 2வது மனைவி ராதிகா முக்கிய குற்றவாளி என்பதும், அவர்தான் சிறுமி ஹேமா ஸ்ரீ-யின் முகத்தை துணியால் அழுத்தி கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், இந்த கொலைக்கு தந்தையே உடந்தையாக இருந்ததும் காவல் துறையினரின் விசாரணையில் அம்பலமானது.
உலக அன்னையர் தினமான நேற்று முன்தினம் இப்படி ஒரு (சின்ன) அன்னையின் அகோரச் செயல் வெளிப்பட்டு இருப்பதும், அதற்கு பெற்ற தந்தையே உடந்தையாக இருந்ததும் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.