மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மேலசெங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். லாரி ஓட்டுனரான இவரும், சிதம்பரம் துணிசிராமேடு கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கம்பி பிட்டர் வேலைக்காக மணிமாறன் தனது மனைவியுடன் சீர்காழி பிடாரி கீழ வீதி பகுதியில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். அப்போது தனது நண்பனை சந்திப்பதற்காக அவ்வப்போது மணிமாறன் வீட்டிற்கு சசிகுமார் வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் சசிகுமார் மர்மமான முறையில் மணிமாறன் வீட்டிலேயே உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சசிகுமார் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அவரது நண்பரான மணிமாறனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது, தனது மனைவியிடம் தவறாக நடக்க முயற்சித்த சசிகுமாரை ஆத்திரம் அடைந்து, தனது வீட்டில் வைத்தே கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை கூறி மணிமாறன் ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து சீர்காழி போலீசார் மணிமாறனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நண்பன் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆர். விவேக் ஆனந்தன்