மதுரை சோழவந்தான் அருகே மன்னாடிமங்லம், புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி உமாதேவி. தம்பதியின் மகன் செல்லப்பாண்டி. (27).
திருமணம் ஆகாத செல்லபாண்டி பெற்றோருடன் வசித்து வந்தார். பெயிண்டராக வேலை பார்த்து வந்த செல்லப்பாண்டி அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தாய் உமாதேவியிடம் போதையில் தகராறு செய்வது வழக்கம் என கூறப்படுகிறது.
அந்தவகையில் இன்று செல்லபாண்டி மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தனது தாயிடம் ‘அது சரியில்லை.. இது சரியில்லை’ என கூறி தகராறு செய்துள்ளார்.
இவர்களது சத்தம் அதிகமாக இருந்ததால் அதே பகுதியை சேர்ந்த செந்தில் (50) என்பவர் அங்கு வந்து ‘இங்கே என்னடா ரொம்ப சத்தமா இருக்கு?’ என தட்டிக்கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. உடனே செல்லபாண்டிக்கு ஆதரவாக அவரது தாய் உமாதேவி வந்து சத்தம் போட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து செல்லப்பாண்டி மற்றும் உமாதேவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர்கள் இருவரும் காயமடைந்த நிலையில் அலறி துடித்தனர்.
இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து 2 பேரையும் அரிவாளால் வெட்டிய செந்திலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் சத்தமாக சண்டை போட்டதற்காக இருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோபிகா ஸ்ரீ