விழுப்புரம் மாவட்டம், வளவனூர் சின்னக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைவிட்டுப் பிரிந்து புதுச்சேரி உறுவையாரில் உள்ள தனது தங்கை வீட்டில் வசித்து வந்தார்.
சுற்றுவட்டார பகுதிகளில் கூலி வேலை செய்து வந்த அய்யப்பன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, அந்த பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு அவர் சென்றுள்ளார். அப்போது அவருக்கும், மது குடிக்க வந்த 5 இளைஞர்களுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு முற்றியதில் 5 பேரும் சேர்ந்து அய்யப்பனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்து அய்யப்பன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அய்யப்பன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதுதொடர்பாக மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, அய்யப்பனை கொலை செய்தது உறுவையாறு பகுதியைச் சேர்ந்த 5 பேர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மது போதையில் இருந்த அய்யப்பன் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டியதால் அடித்துக் கொலை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.