மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, பெருந்தோட்டம் கோடாலி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவரது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தின் ஒரு பகுதியை செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காக பெருந்தோட்டம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் என்பவருக்கு ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார்.
அதன்படி, கடந்த சில நாட்களாக மண் எடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணி நடந்துள்ளது. அப்போது, ‘மண் எடுப்பதற்கான முழு தொகை வழங்காமல் ஏன் மண் எடுக்கிறீர்கள்?’ எனக் கேட்டு ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் ராஜேந்திரனை மண்வெட்டியால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சுயநினைவு இழந்து கீழே விழுந்த ராஜேந்திரன் அசையாமல் கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரனுக்கு தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது ஆலோசனைப்படி டிராக்டரை ஏற்றி விபத்து நடந்ததுபோல் செட்டப் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
நீண்ட நேரம் ஆகியும் விவசாயி ராஜேந்திரன் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது உடல் நசுங்கி ராஜேந்திரன் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து திருவெண்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேந்திரனின் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இதற்கிடையே ‘பாஸ்கரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவரது ஊழியர்களை கைது செய்ய வேண்டும்’ என்று ராஜேந்திரனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்ததால் பெருந்தோட்டம் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது ராஜேந்திரனை அடித்துக் கொலை செய்துவிட்டு டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டதுபோல் நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் மற்றும் அவரது டிராக்டர் ஓட்டுநர் பாலா ஆகிய இருவரை திருவெண்காடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.