திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மெயின் பஜார் வீதியில் அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான ‘பாலாஜி பவுன் புரோக்கர்’ என்ற நகை அடகு கடை உள்ளது.
இன்று மதியம் காரில் வந்த டிப்டாப் பெண்மணி ரஞ்சனா சிங் என்பவர் அசோக்குமாரிடம் 19.5 கிராம் தங்க நகைகளை கொடுத்து கடனாக 60000 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்.
அவரது ஆதார் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை பரிசோதித்து மொபைல் போனில் படம் எடுத்துக்கொண்ட கடை உரிமையாளர் அசோக்குமார் நகைகளை சோதித்துக்கொண்டு இருந்தார்.
இதற்கிடையே ரஞ்சனா சிங் பணத்தை எடுத்துக்கொண்டு காரில் ஏறியுள்ளார். அதற்குள் ரஞ்சனா சிங் அடகு வைத்த நகை போலி என்பது தெரியவந்ததால் அசோக்குமார் ஓடி வந்து காரை மடக்கி உள்ளார்.
ஆனாலும், பிடிப்பதற்குள் அவரது கார் கிளம்பிவிட்டது. உடனே அசோக்குமார் காரில் இருந்த ரஞ்சனாவின் ஹேண்ட் பேக்கை இறுகப் பற்றிக்கொண்டு, கூச்சலிட்டு கத்தியுள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத ரஞ்சனா சிங்கின் டிரைவர் காரை வேகமாக எடுத்துள்ளார். ஆனாலும் ஹேண்ட் பேக்கை விடாமல் அசோக்குமார் காரில் தொங்கியபடி சாலையில் உடல் தேய்ந்த நிலையில் கொஞ்ச தூரம் போயுள்ளார்.
இதில் சட்டை கிழிந்த நிலையில் ஹேண்ட் பேக்கை பிடுங்கிக் கொண்டு அசோக்குமார் வந்துவிட்டார். இதன் பிறகு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வீடியோ புட்டேஜ்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சனா சிங்கை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்கள் நிறைந்த மெயின் பஜாரில் நடந்த இந்த சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அன்புவேலாயுதம்