பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு நடராஜன் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
டாஸ்மாக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நடராஜன் அவ்வப்போது ரூ.5 அல்லது ரூ.10 என கூடுதல் தொகை வாங்குவது வழக்கம் என கூறப்படுகிறது.
அந்தவகையில் இன்று டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில் வாங்க வந்த மதுபிரியர்களிடம் கூடுதலாக 5 ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 வாடிக்கையாளர்கள் நடராஜனுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் அவர்களிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் 3 மதுபிரியர்களும் சேர்ந்து டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர் நடராஜனை மதுபாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதைப் பார்த்த மதுபிரியர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த நடராஜனை சக ஊழியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கோபிகா ஸ்ரீ