விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம், கடையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (40). இவரது மனைவி கலையம்மாள் (32). தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளார். இதே கிராமத்தை சேர்ந்தவர் கண்னன். இவரது மகன் பாரதி (23).
சிறுவயதிலேயே பாரதி தனது தாயை இழந்த நிலையில் தந்தையும் கண்டுகொள்ளாததால் கோவிந்தன் பாசம் காட்டி வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து பாரதி குடும்பத்தில் ஒருவனாக மாறி 3 பெண்களை சகோதரிகளாக ஏற்று பழகி வந்துள்ளார்.
கோவிந்தனின் நிலம் ஊர் எல்லையில் காப்புக்காடு அருகில் உள்ளது. இந்த நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். பாரதி அடிக்கடி தந்தை கோவிந்தன் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டில் காட்டு பன்றி வேட்டைக்கு செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவிந்தனின் மூத்த மகள் மீது பாரதிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கோவிந்தனிடம் மூத்த மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தன், ‘அவள் உனக்கு தங்கை. இந்த பேச்சை அப்படியே மறந்துவிடு. மரியாதை கெட்டுவிடும்’ என சற்று கடுமையாகவே பேசியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த பாரதி தனது தந்தை கோவிந்தன் வீட்டில் பால் கறந்து கொண்டிருந்தபோது நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து கோவிந்தனின் தலையில் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சாய்ந்த கோவிந்தனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அவரது மனைவி கலையம்மாளையும் பாரதி கையில் இருந்த நாட்டு துப்பாக்கியால் காலில் சுட்டுள்ளார்.
இவர்கள் 2 பேரின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும் பாரதி நாட்டு துப்பாக்கியுடன் காப்புக்காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டார். உடனடியாக துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட கணவன், மனைவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் துப்பாக்கியால் பெற்றோரை சுட்டுவிட்டு தப்பிய பாரதியை தேடி விழுப்புரம் வனசரக அலுவலர் பாபு தலைமையில் வனத்துறையினர் காட்டுக்குள் சென்றுள்ளனர்.
போலீசார் வருவதை பார்த்த பாரதி காப்புக்காட்டில் பாறை மீது ஏறி நின்றுகொண்டு, ‘நாட்டு துப்பாக்கியால் சுட்டு விடுவேன். நாட்டு வெடிகுண்டு கையில் உள்ளது. வந்தால் உங்கள் மீது வீசி விடுவேன்’ என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதன் பிறகு பாறைக்கு பின்புறம் சென்று காப்பு காட்டில் தப்பி மறைந்துள்ளார். இதையடுத்து தப்பியோடிய பாரதியை கைது செய்ய காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.