விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் கோனகிரி. இவரது மனைவி பஞ்சாங்கம் (65). கணவனை இழந்த பஞ்சாங்கம், கூலி வேலை செய்து தனது மகள்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டு தற்போது தனியாக வசித்து வருகிறார்.
நேற்று பஞ்சாங்கம் ராஜபாளையம் அருகே குருவி பாறைக்காடு ஆற்றங்கரையோரம் இலவமர காய்கறி பறித்துக்கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் பஞ்சாங்கத்தின் உறவினர் சுப்பையா என்பவரது மகன் முத்து (35) அருகில் உள்ள புதரில் பதுங்கி இருந்துள்ளார்.
பின்னர், திடீரென வெளியே வந்து பஞ்சாங்கத்தை கட்டிப் பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பஞ்சாங்கம் ‘நான் உன் அம்மா வயது. உனக்கு சித்தி முறை. என்னிடம் இப்படி செய்யலாமா?’ எனக் கேட்டு கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முத்து தனது சித்தி பஞ்சாங்கத்தின் கழுத்தை பிடித்து நெரித்து ‘இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன்’ எனக்கூறி மிரட்டி சென்றார். அதோடு பஞ்சாங்கத்தின் மீது ரூ.500 பணத்தை வீசி சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதில் பயந்துபோன பஞ்சாங்கம் பிறகு காட்டு வேலைக்கு சென்ற பெண்களுடன் சேர்ந்து ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பினார். பின்னர், இதுபற்றி தனது மகள்களிடம் கூறி அழுதுள்ளார். இதைத்தொடர்ந்து பஞ்சாங்கம் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக முத்து மீது கொலை மிரட்டல், பெண்ணை இழிவுப்படுத்துதல் உள்ளிட்ட ஜாமீனில் வெளியே வர முடியாத 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை தீவிரமாக தேடி வருகின்றனர்.