விஷ சாராய விவகாரம்: முக்கிய குற்றவாளி சென்னையில் அதிரடி கைது

1,000 லிட்டர் மெத்தனாலை சாராய வியாபாரிகளுக்கு விற்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
விஷ சாராய விவகாரம்: முக்கிய குற்றவாளி சென்னையில் அதிரடி கைது

விஷ சாராய விவகாரம் தொடர்பாக சென்னையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயத்தை பலர் வாங்கி குடித்துள்ளனர். இவர்களில் பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனாலும் மருத்துவம் பலனளிக்காத நிலையில் ஒருவர் பின் ஒருவராக இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 58 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும் விஷச்சாராயம் குடித்த 8 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தைக் குறித்து கண்டன குரல்கள் பல எழுந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை ’கள்ளச்சாராய வேட்டை’ நடத்தியது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த விழுப்புரம், செங்கல்பட்டு விஷசாராய வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவிப்பை அடுத்து வழக்குகளை மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியை சென்னையில் கைது செய்தது காவல்துறை. சென்னை அருகே மதுரவாயல் கெமிக்கல் ஆலை உரிமையாளரான இளையநம்பி இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 1,000 லிட்டர் மெத்தனாலை சாராய வியாபாரிகளுக்கு விற்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

ஏற்கனவே தடயவியல் ஆய்வு அறிக்கையில் விழுப்புரம், செங்கல்பட்டில் இறந்தவர்கள் குடித்தது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல. ஆலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் என்கிற விஷ சாராயம் என்பது தெரியவந்ததுள்ளது. இந்நிலையில் இளைய நம்பியிடம் அவர் விஷசாராயத்தை யாருக்கெல்லாம் விற்றார், அந்த விஷ சாராயங்கள் எங்கு இருக்கிறது, இதில் தொடர்புடையவர்கள் யாரேனும் உள்ளார்களா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com