திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மங்கலம் சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு தமிழ்த்துறை பேராசிரியராக இருப்பவர் பாலமுருகன்(52). இவர் மீதுதான் பாய்ந்துள்ளது போக்சோ வழக்கு. அந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் இவர் ஈடுபட்டுள்ளார், என்பதே புகார். பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் இதை கூறியுள்ளார், அவர்கள் தமிழக முதல்வர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோருக்கு புகார் அனுப்பினர்.
அங்கிருந்து திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவு வந்ததும், சம்பந்தப்பட்ட பல்லடம் அனைத்து மகளிர் போலீஸார் களத்தில் இறங்கினர். மாணவியிடம் விசாரணை செய்ததன் முடிவில் பாலமுருகன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து பேராசிரியர் பாலமுருகன் தலைமறைவாகிவிட்டார். கைதை தவிர்ப்பதற்காக அவர் முன் ஜாமீனுக்கு முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட இளைஞர் பேரவை அமைப்புகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்து சமூக வலைதளங்களில் சில கேள்விகளை வைரலாக்கி வருகின்றனர். அதில் குறிப்பாக "மாணவி தரப்பு கடந்த ஜூலை இறுதி வாரத்திலேயே புகார் கொடுத்துவிட்டார்களாம். ஆனால் காவல்துறை ஏன் இவ்வளவு கால தாமதமாக நடவடிக்கையில் இறங்கியது? ஒரு பேராசிரியர் ஜஸ்ட் லைக் தட் ஆக தப்பிப்போகும் அளவுக்கு விட்டது ஏன், அவரை கைது செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம்?
போக்சோ வழக்கில் சிக்கிய பேராசிரியர் பாலமுருகன் மீது பல்லடம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஏன் இன்னமும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை? குழு அமைத்து விசாரிக்கிறோம்! என்கிறார்கள், அது எப்போது முடிவெடுக்கும்? பேராசிரியர் பாலமுருகன் குற்றமற்றவர் என்றால் ஏன் கிரிமினல் போல் ஓடி ஒளிய வேண்டும், தைரியமாக நின்று தனது ஒழுக்கத்தை நிரூபிக்க வேண்டியது தானே? போலீஸ் விசாரித்துவிட்டு தான் போக்சோ வழக்கை பாய்ச்சியுள்ளார்கள், அப்படியென்றால் தன் குழந்தை போல் பாவித்து பாடம் எடுக்க வேண்டிய மாணவியிடம் பாலமுருகன் அத்துமீறலில் ஈடுபட கேவலமாக இல்லையா?" என்று கேள்விகள் நீள்கின்றன.
இதற்கிடையில் இதே பாலமுருகன் இதற்கு முன் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றிய போது அக்கல்லூரியை சேர்ந்த கெளரவ விரிவுரையாளர் ஒருவரின் சான்றிதழ்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி அத்துமீறல் செய்த புகாருக்குள்ளாகி போலீஸ் விசாரணை வரையில் சென்ற சம்பவமும் நடந்துள்ளது.
அதையும் மேற்கோளிட்டு பாலமுருகன் பற்றிய சர்ச்சையை வைரலாக்கி வருகிறார்கள் நீதி கேட்கும் மாணவர்கள். "இந்த விவகாரத்தில் தெளிவான மேல் விசாரணையும், சட்ட நடவடிக்கையும், உயர்கல்வித்துறையின் ஆக்ஷனும் மிக விரைவாக வேண்டும். அதுதான் பாதிக்கப்பட்டவரின் காயத்தை ஆற்றும். இது விரைந்து நடக்கவில்லை என்றால் போராட்டத்தில் குதிப்பது பற்றி யோசிப்போம்" என்று திருப்பூர் மாவட்ட மாணவர் அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன.
- ஷக்தி