பாமக எம்.எல்.ஏ மகன் வரதட்சனை கொடுமை வழக்கு: குடும்பமே தலைமறைவு!

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ சதாசிவம் மகன் சங்கர் மீது அவரது மனைவி வரதட்சனை கொடுமை என புகார் கொடுத்துள்ளார்.
பாமக எம்,எல்.ஏ சதாசிவம்
பாமக எம்,எல்.ஏ சதாசிவம்

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சதாசிவம். இவர் பாட்டளி மக்கள் கட்சியை சேர்ந்தவர், இவருக்கு பேபி என்ற மனைவியும், சங்கர் என்ற மகனும், கலைவாணி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2018ம் ஆண்டு சங்கருக்கு சேலம் சர்க்கார் கொல்லபட்டியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகள் மனோவியாவுடன் திருமணம் நடந்தது. சங்கர்-மனோவியா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் சமீபகாலமாக குடும்ப பிரச்னையில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனோவியா கணவரை பிரிந்து தந்தையின் வீட்டில் இருக்கிறார். மூன்று வாரத்திற்கு முன்பு சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் "திருமணத்தின் போது கார் ஒன்றும், 250 பவுனும் தங்க நகைகளும் என் பெற்றோர் சீர் வரிசையாக எனக்கு அளித்தனர். தற்போது மீண்டும் கார் கேட்டு எனது கணவர் கொடுமை படுத்துகிறார். இதற்கு மாமனார் எம்.எல்.ஏ சதாசிவமும், மாமியார் பேபியும் உடந்தை" என்று புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரித்த சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் எம்.எல்.ஏ மகன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வரதட்சணை, கொடுமை படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இது தொடர்பாக சேலம் மேட்டூர் பாமகவினரிடம் பேசியபோது "எம்.எல்.ஏ சதாசிவம், தான் பார்த்து கொண்டிருந்த தொழிலை மகன் சங்கர் கவனித்து கொள்ளும்படி கொடுத்துவிட்டார். எம்.ல்.ஏ ஆனதில் இருந்து தொழிலை மகன் சங்கர் தான் பார்த்து கொள்கிறார். இது குடும்ப விவகாரம் பெரிதாக எதுவும் வெளியே வராது. சங்கருக்கும் அவரது மனைவிக்கும் மனஸ்தாபங்கள் இருந்தது, யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து போனால் பிரச்னை சரியாகிவிடும்" என்று கூறினார்கள்.

சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் சசிகலா புஷ்பா போன் சுவிட்சு ஆஃப் என்ற நிலையில், சூரமங்கலம் உதவி கமிஷனர் நிலவழகனிடம் பேசினோம். மனோவியா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதியபட்டிருக்கிறது, சம்மன் அனுப்பி விசாரிப்போம். எம்.எல்.ஏ தலைமறைவா என்பதெல்லாம் தெரியவில்லை. தலைமறைவாகும் அளவுக்கு இதில் ஒன்றுமில்லை. எம்.எல்.ஏ சதாசிவத்தை விவரம் கேட்க தொடர்புகொண்டால் போன் ரிங் போய் கொண்டிருந்தது, அழைப்பை ஏற்கவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com