பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது - எப்படி தெரிந்து கொள்வது?

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் உயர்க்கல்விக்கு வழிகாட்டும் வகையில், உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 3,324 மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது. இந்தத் தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர்.

இதில் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வில் எழுதினர். சுமார் 48000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்வில்லை. தேர்வுக்கு பிறகு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் 10ம் தேதி முதல் 21ம் தேதி வரை 79 மையங்களில் நடந்தது.

இதன் பின்னர் நீட் தேர்வை கருத்தில்கொண்டு தேர்வு முடிவு மே 8ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காலை 9.30 மணிக்கு வெளியிட உள்ளார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in www.dge.tn.gov.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களில் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்வியில் சேருவது பற்றிய சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 14417 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 வரை மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் உயர்க்கல்விக்கு விண்ணப்பிப்பது எப்படி? பாடப் பிரிவுகளை எப்படி தேர்வு செய்வது? கட் ஆப் மதிப்பெண்கள் குழப்பம் ஆகியவற்றை தீர்க்கும் வகையில் உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com