தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தண்ணீர் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை முழுவதும் தரம் இல்லாத தண்ணீர் கேன்கள் விநியோகம் செய்யப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குடிநீர் கேன் விநியோகம் செய்யும் குடோன்களில் ஆங்காங்கே திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் சென்னை சின்மயா நகர் பகுதியில் இயங்கி வரும் குடிநீர் கேன் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த நிறுவனத்தில் கேன்களில் நிரப்பப்படும் குடிநீரின் தரத்தை பரிசோதிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கருவியில் புறா கூடு கட்டி இருந்தது. மேலும் அந்த கூட்டில் புறா ஒன்று இறந்த நிலையிலும் இருந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் குடிநீர் நிறுவன அதிகாரிகளை அழைத்து, கடும் அதிருப்தியை தெரிவித்தனர். மேலும் அந்த கம்பெனிக்கு விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்ததோடு, எச்சரிக்கையும் விடுத்துச் சென்றனர்.