தமிழகத்தில் உள்ள இயன்முறை மருத்துவர்கள் (பிஸியோதெரபிஸ்ட்) அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
இன்று தமிழகத்தில் முப்பது, நாற்பது சதவிகித மக்களுக்கு நரம்பியல் கோளாறு, இதயவியல், எலும்பு முறிவு, மகப்பேறியல், குழந்தைகள் நலத்தில் சிக்கல், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, தசை சிதைவு பிரச்சனை என்று பல நூறு உடற்கோளாறுகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்த உடற்கோளாறுகளை களைய ஊசி மருந்து வேண்டாம், மாத்திரை மருந்து வேண்டாம், குறிப்பிட்ட நரம்புகள், தமனிகள், தசைகள், சதைகள், மூட்டுக்கள் இவைகளை அதனுடைய போக்கில் இயக்கிட கண்டுபிடிக்க பட்டிருக்கிற மெக்கானிச அடிப்படையில் தடவி, வருடி, உருவி, ஆட்டி அசைத்து, மடக்கி, நீட்டி, அவைகளை அதன் போக்கில் இயங்க செய்தாலே போதும். மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற இந்த உடற்கோளாறுகள் இல்லாமல் போய்விடும். இதற்கான முறையான மருத்துவப்படிப்பு படித்தவர்களே பிசியோதெரப்பிஸ்ட்.
ஆனால், இந்தப் பிசியோதெரப்பிஸ்ட்டுகளுக்கு செல்லும் இடமெங்கும் வாய்ப்புகள் அதிகமிருந்தும், அவர்களுக்கான சம்பளம் என்பது மற்ற மருத்துவர்களைக்காட்டிலும் மிக, மிகக் குறைவாக இருப்பதுதான் வேதனையான விசயம்.
இந்தநிலையில், பிசியோதெரப்பிஸ்ட்டுகளின் தொகுப்பூதியத்தை அரசு உயர்த்தித்தர வேண்டும் என இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரப்பிஸ்ட்டுகள் சங்கத்தின் தமிழக கிளைத்தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"தமிழகத்தில் தேசிய சுகாதார கிராமப்புற திட்டத்தின் கீழ் மக்களைத் தேடி மருத்துவம், சிறப்பு குழந்தைகள் நல மையம், தொற்றா நோய்களுக்கான நல வாழ்வு மையம் ஆகிய பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் சுமார் 577 இயன்முறை மருத்துவர்கள்(பிஸியோதெரபிஸ்ட்) பணிபுரிந்து வருகின்றனர். மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை சுமார் ஒரு கோடிக்கும் மேல் பயனாளிகளை கடந்து சென்றிருக்கிறது.
அதேநேரம், புதிய சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்த நோயாளிகளை இனம் கண்டறியப்படுவது மிகச்சிறப்பம்சம், பக்கவாத நோயாளிகள், எலும்பு முறிவு, தலைக்காய அறுவை சிகிச்சைகளுக்கு பின் மறுவாழ்வு, சிகிச்சை தேவைப்படுவோர், முதுகு தண்டு வட பாதிப்புகளுக்கு உள்ளானோர் தங்களது மருத்துவமனை உள்நோயாளி சிகிச்சைக்கு பிறகு உடனடியாக இத்திட்டங்களில் கீழ் பட்டியலிடப்படுவதால் பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை தாமதமின்றி கிடைக்கத்தொடங்கி விடுகின்றது.
உடல் இயக்க குறைபாட்டால் அவர்கள் இருப்பிடத்திலேயே முடங்கிவிடாமல் பாதுகாக்கப்படுகின்றனர். பிசியோதெரபி சிகிச்சையை பொறுத்தவரையில் உடல் உழைப்பை பிசியோதெரபி மருத்துவர்கள் அதிகம் தருகின்றனர்.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் பத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசியோதெரப்பிஸ்ட்டுகள் உள்ளனர். இந்த பத்து பேரையும் சந்தித்து சிகிச்சையளிக்க அவரவர் இல்லம் தேடி பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கின்றது.
ஆனால், தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட பிசியோதெரப்பிஸ்ட்கள் அனைவருக்கும் தொகுப்பூதியமாக மாதம் ரூ.13 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த தொகுப்பூதியம் பிசியோதெரப்பிஸ்ட்டுகளின் தகுதிக்கு மிக மிக குறைந்த சம்பளமாகும். மிகமுக்கிய சமூக நலத்திட்டங்களில் பணியாற்றும் பிசியோதெரப்பிஸ்ட்டுகளுக்கு நியாயமான சம்பளம் கொடுக்க வேண்டும்.
தனியார் மருத்துவ நிறுவனங்களில் பணியாற்றும் பிசியோதெரப்பிஸ்ட்டுகளுக்கு ரூ.24,228-ஐ குறைந்த பட்ச ஊதியமாக தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை நிர்ணயித்திருக்கின்றது.
அதேநேரம், ஆந்திராவில் இதே பிசியோதெரப்பிஸ்ட்டுகள் ரூ.30 ஆயிரத்து 387 தொகுப்பூதியம் பெற்று வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இத்திட்டத்தில் பிசியோதெரப்பிஸ்ட்டுகளுக்கு தொகுப்பூதியம் தமிழகத்தைவிட கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.
எனவே, சமூகத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிசியோதெரப்பிஸ்ட் மருத்துவர்கள் மீது தமிழக அரசு அக்கறைக்காட்ட வேண்டும்.
எனவே, நோயாளிகளில் இருப்பிடங்களைத் தேடி கண்டுபிடித்துச் சென்று சிகிச்சையளிக்கும் பிசியோதெரப்பிஸ்ட்டுகளுக்கு தொகுப்பூதியத்தை ரூ.13 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
- ஷானு