கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், அனைத்து பட்டாசு சில்லரை விற்பனை கடைகளில் வருவாய்த்துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் உத்தரவின் பேரில் போலீசாரும் ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு கடை நடத்தி வந்ததாக 48 கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: "மரக்கடை, வெல்டிங் கடை, குடியிருப்புகள், ஹார்டுவேர்ஸ் கடை, வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தனியார் மருத்துவனைகள், போக்குவரத்து நிறைந்த மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், போதிய பாதுகாப்பு மற்றும் அவசர விபத்து காலங்களில் வெளியேற போதிய வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்டு வந்த பட்டாசு சில்லரை விற்பனை கடைகளுக்கு காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட தடையின்மை சான்று ரத்து செய்யப்பட்டு, அறிக்கை அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், பட்டாசுக் கடைகளின் உரிமம் இந்திய வெடிப்பொருள் சட்டம் 1884 விதி 138ன் கீழ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றனர். மேலும், வருவாய்துறை சார்பிலும் பட்டாசு கடைகளில் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- பொய்கை.கோ. கிருஷ்ணா