பெரியார் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்! - முதலமைச்சர் ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம் என பெரியார் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் 145வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளையொட்டி வேலூர் அண்ணா சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியார் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மாவட்ட திமுக அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக்கு எதிராக சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் பெரியார் பிறந்தநாள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், ”அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்!

மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து - மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.

தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது!

பெண் விடுதலைக்காகவும் சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே!

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை! என பதிவிட்டுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com