மோடி, அமித்ஷா போன்றோரைப் பற்றித்தான் பெரியார் அதிகம் கவலைப்பட்டார்- திருமாவளவன்

பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு இல்லையென்று சொன்னால் இந்து மதத்தை தூக்கி கொண்டாட தயார் என எம்.பி. திருமாவளவன் பேசியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த "இந்தியாவின் சமூகநீதி பெருவிழா" மதுரை உலக தமிழ்சங்க அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதையடுத்து இவ்விழாவில் பேசிய திருமாவளவன், "அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையில் சொல்லப்பட்டுள்ள அனைத்திற்கும் எதிரானது சனாதனம். இந்தியாவில் பாசிசம் என்ற சொல் தான் சனாதனம் என்ற இன்னொரு சொல்லாக உள்ளது. சனாதனம் என்றால் தொடக்கம் இல்லாதது, அழிவு இல்லாதது, மாறாதது, நிலையானது என்பது பொருள்.

வேத பரம்பரையினருக்கும், இந்தியாவின் பூர்வ குடியினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆரியர்களுக்கும், வேதத்திற்கும் தான் சம்பந்தம் இருக்கிறது. ஆரியர்களின் வாழ்வை தொகுப்பதற்காக எழுதப்பட்ட ஒரு நூல் தான் மனுஸ்மிருதி.

விழாவில் பங்கேற்ற பிடிஆர், திருமாவளவன்
விழாவில் பங்கேற்ற பிடிஆர், திருமாவளவன்

மனுஸ்மிருதிக்கு எதிராக எழுதப்பட்டது தான் அரசமைப்பு சட்டம். 2000 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த சட்டத்திற்கு மாற்றாக எழுதப்பட்டது தான் அரசமைப்பு சட்டம். மனுஸ்மிருதி சட்டம் சனாதனம் பேசுகிறது, அரசமைப்பு சட்டம் ஜனநாயகம் பேசுகிறது.

பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வை நிலைப்படுத்துவது தான் சனாதனம். பிராமண சாதிக்குள் கூட சமத்துவம் கிடையாது. சனாதன தர்மத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது பிராமண பெண்கள் தான். இந்தியாவில் சமத்துவமும், சகோதரத்துவமும் இல்லாத ஒரு மதம் இந்து மதம் மட்டுமே.

பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு இல்லையென்று சொன்னால் இந்து மதத்தை தூக்கி கொண்டாட தயார். தந்தை பெரியார் பஞ்சமர்களை விட சூத்திரர்களை பற்றி தான் அதிகம் கவலைப்பட்டார். திருமாவளவனை விட மோடி, அமித்ஷாவை பற்றி தான் அதிகம் கவலைப்பட்டார் பெரியார்" என தெரிவித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com