தேனி மாவட்டம் பெரியகுளத்தில், முகமது அசாருதீன் என்பவருக்கு சொந்தமான காரில் உள்ளே புகுந்த எலியால், கார் தீப்பற்றி எரிந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டதால் கார் முழுமையாக தீ விபத்தில் இருந்து தப்பியது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன் வசித்து வருகிறார்.
இவர், தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டில் நிறுத்தி வைத்திருந்த ஹூண்டாய் காரை ஸ்டார்ட் செய்துள்ளார். காரை இயக்கிய பொழுது காரின் முன் பகுதியில் உள்ள இன்ஜின் பகுதியில் இருந்து தீப்பற்றி பெரிய துவங்கி புகை வர ஆரம்பித்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக முகமது அசாருதீன் காரை நிறுத்திவிட்டு வெளியேறினார். காரின் எஞ்சின் பகுதியில் மளமளவென தீ பற்றி எரிய தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த நீரை ஊற்றி அணைக்க முற்பட்டும் தீ கட்டுப்படுத்த முடியாத நிலையில் உடனடியாக பெரியகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காரில் எஞ்சின் பகுதியில் நீரைப் பாய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும், கார் தீ பற்றி விபத்துக்குள்ளானது குறித்து பெரியகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், கார் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் எலிகள் உள்ளே புகுந்து வயர்களை கடித்துள்ளது. இதனால் என்ஜின் ஸ்டார்ட் செய்யும் பொழுது ஸ்டார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது என்று தெரிய வந்தது.