பெரம்பலூர்: ஆசிரியராக மாறிய மாவட்ட ஆட்சியர் - போட்டித்தேர்வெழுதும் மாணவர்கள் உற்சாகம்
அரசு பள்ளியில் பயின்று மாவட்ட ஆட்சியரானதால் மாணவர்களின் தேவைகளை அறிந்து அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார் பெரம்பலூர் கலெக்டர் கற்பகம்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த சிறப்பு பயிற்சி வகுப்பான விலங்கியல் பாட வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் மாணவர்களுக்கு நடத்தினார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவடைந்ததும் பல்வேறு போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்ற அடிப்படையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் -05 ம் தேதி தொடங்கப்பட்டு மே -4ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்த சிறப்புப் பயிற்சி வகுப்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தனது விருப்ப நிதியிலிருந்து ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் போட்டித் தேர்விற்கான புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிகள் வழங்கி மாணவர்கள் ஆர்வத்துடன் பாடம் கற்க வழி செய்து கொடுத்திருக்கிறார்.
கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த பயிற்சி வகுப்புகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் மாணவர்கள் போட்டி தேர்வுகளை எவ்வித அச்சமும், தயக்கமும், பதட்டமும் இல்லாமல் எழுதும் வகையில் ஒவ்வொரு பாடத்திலும் தலைசிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக 02.05.2023, 03.05.2023, மற்றும் 04.05.2023 ஆகிய தேதிகளில் காலை மாதிரி தேர்வுகளும், மாலை நடைபெறும் வகுப்பில் காலை நடைபெற்ற தேர்வுக்கான பதில் மற்றும் அது தொடர்பாக மேலும் எழும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பது போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் நேற்று விலங்கியல் தொடர்பாக நடைபெற்ற மாலை நேரப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்தினார். மாணவர்களுக்கு விலங்கியல் தொடர்பான சந்தேகங்களுக்கு சுலபமாக புரியும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாடம் நடத்தியதை மாணவர்கள் உற்சாகத்துடன் கவனித்தனர். தான் படிக்கும் காலத்தில் அரசு பள்ளியில் படித்து எம்.எஸ்.சி., பி.எட் பட்டம் பெற்றவர் கற்பகம். அதன் பின்னர் அரசு ஊழியர் ஆகி பதவி உயர்வில் தற்போது பெரம்பலூர் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். அதனால், தான் அரசு பள்ளி மாணவர்களின் தேவைகளை புரிந்து இப்படி அவர் செயல்பட்டு வருகிறார். அவருடைய இந்த செயல்பாடுகள் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த முறை இந்த மாணவர்களில் எத்தனை பேர் போட்டித் தேர்வுகளில் வென்று உயர் கல்விக்கு சென்றாலும் அதற்கு காரணம் மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் தான்.
- ஷானு