தர்மபுரி அருகே டோல்கேட் அமைக்க வீடுகளை காலி செய்ய சொல்லி அதிகாரிகள் நெருக்கடி தருவதால் கோவில் வளாகத்தில் கிராம மக்கள் தஞ்சமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேவுள்ள கோவிலூரான் கொட்டாய் அருந்ததியர் குடியிருப்பில் வசிக்கும் கிராம மக்களே குடியிருந்த வீட்டை காலி செய்து உடமைகளுடன் கருப்புக்கொடியேந்தியபடி அருகேவுள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் தஞ்சமடைந்துள்ளவர்கள்.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, ”மூன்று தலைமுறைகளாக முப்பது குடும்பத்தினர் இங்கு வசித்து வருவதாகவும், அதியமான் கோட்டையிலிருந்து ஒசூர் வரையிலான புதிய நான்கு வழிச்சாலை பணி நடந்து வருவதாகவும், தங்களது குடியிருப்புகள் இருந்த இடத்திற்கு அருகே டோல்கேட் அமைக்கப்பட்டு வருவதால், குடியிருந்த வீடுகளை காலி செய்ய சொல்லி மாற்று இடமாக வெப்பாலம்பட்டி என்ற இடத்தில் அரசு வீட்டு மனை பட்டா வழங்கியதாகவும், எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத அந்த இடத்தில் வீட்டு மனை வழங்கியதால் பட்டாவை அரசு அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைத்திருப்பதாக தெரிவிக்கும் கிராம மக்கள் குடியிருந்த வீடுகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கி தங்களது ஊருக்கு அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வீட்டுமனை வழங்கி, வீடு கட்டி தங்களை காப்பாற்றிட வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
டோல்கேட் அமைக்கும் பணி நடந்து வருவதை காரணம் காட்டி தற்போது குடியிருந்து வரும் தங்களது வீடுகளை அதிகாரிகள் காலி செய்யும்படி நெருக்கடி கொடுத்து வருவதால் எங்கே செல்வது என தெரியாமல் வேறு வழியின்றி கருப்புக்கொடி ஏந்தியபடி தங்களது உடமைகளுடன் கோவில் வளாகத்தில் தஞ்சமடைந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
பொய்கை கோ.கிருஷ்ணா