ராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மடத்தாகுளம் கிராமத்தில் சுமார் 85க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு இடம் வாங்கிக் கொடுத்தது தொடர்பாக, இரு தரப்பினருக்கிடையே பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 25 குடும்பங்களை மடத்தாகுளத்தை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர்கள், ‘பலமுறை நாங்கள் மனுக்கள் கொடுத்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இந்த முறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஊரை காலி செய்வோம். ஊர் திருவிழாக்கள் மற்றும் இறப்புகளில் கூட எங்களை கலந்துகொள்ள விடாமல் தடுக்கின்றனர். காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க விடாமல் தடுத்து வருகின்றனர்’ என குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் பேசுகையில், ‘கடந்த 2 ஆண்டாக 25 குடும்பங்களை கிராம முக்கியஸ்தர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
தற்போது 42 குடும்பங்களை ஒதுக்கி வைத்துள்ளனர். ஊரில் தண்ணீர் பிடிக்க விடுவதில்லை. சர்ச் போக விடுவதில்லை. எங்களுடைய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார்.
அவரை பொதுமயானத்தில் அடக்கம் செய்யவிடவில்லை. இதுதொடர்பாக நாங்கள் போலீசாரிடம் புகார் அளித்தும் அவர்கள் எங்களிடம் தொடர்ந்து பிரச்னை செய்து கொண்டே வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் நாங்கள் மனு கொடுக்க வந்துள்ளோம். இந்த நிலை தொடர்ந்து கொண்டே வந்தால் நாங்கள் ஊரை காலி செய்துவிட்டு போகக் கூடிய நிலையில் உள்ளோம். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.