கதண்டு வண்டுகள் கடித்து பரிதாபமாக இறந்த பெண் அரசுக்கு கோரிக்கை வைக்கும் மக்கள்!

இரு பெண்களை கதண்டு வண்டுகள் கடித்ததில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கிராமப்புற பனை மரங்களில் கூடு கட்டியிருக்கும் கதண்டுகளை அழிக்க மக்கள் கோரிக்கை.
உயிரிழந்த மூதாட்டி
உயிரிழந்த மூதாட்டி

மயிலாடுதுறை அருகே அகர மணல்மேட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன். இவரது தாயார் பட்டு குடும்பத்திற்கு உதவியாக ஆடு, மாடுகளை மேய்த்து வருவாய் ஈட்டி வந்தார். தினந்தோறும் அருகில் உள்ள வயல்வெளிக்கு ஆடு, மாடுகளை ஓட்டிச்சென்று மேய்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நேற்றைய தினம் ஆடு, மாடுகளை ஓட்டிச்சென்று மேய விட்டுவிட்டு ஒரு பனை மரம் அருகே அமர்ந்து தனது உறவினர் மலர்க்கொடி என்பவரிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென காற்று வீசவே பனை மரத்தின் மட்டை ஒன்று முறிந்து கீழே விழுந்துள்ளது. அந்த மட்டையில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் கூட்டாக அங்கே அமர்ந்திருந்த பட்டுவையும் அவரது உறவினர் மலர்கொடியையும் கடித்துள்ளது.

இதில் படுகாயமடைந்து மயக்கமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் மலர்கொடி சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து மணல்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டாக்டர் சிவக்குமார்
டாக்டர் சிவக்குமார்

கிராமத்தினரிடம் பேசினோம் "தற்போது கோடை மழை குறைந்திருப்பதால் கதண்டுகள் பனை மரங்களில் கூடு கட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மழை பெய்தால் இந்த வண்டுகள் அழிந்துவிடும். ஏற்கனவே ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் கதண்டு கடித்து உயிரிழந்துள்ளனர். இப்போது ஒரு பெண் பலியாகியிருக்கிறார். இந்த பகுதியில் உள்ள பனை மரங்களில் கூடு கட்டி வாழ்ந்து வரும் கதண்டுகளை தீயணைப்புத்துறையினர் அழித்து மக்கள் உயிருக்கு பாதுகாப்பு ஏற்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றனர்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த பொது மருத்துவரும், கதண்டு கடி சிறப்பு மருத்துவருமான டாக்டர் சிவக்குமாரிடம் கேட்டோம்."கதண்டு கடித்து விஷம் உடலில் ஏறினால் உடனடியாக பி.பி குறையும், வலிப்பு வரும். இரண்டு நாட்கள் கழித்து கிட்னி பாதிப்பு ஏற்படக்கூடும். அவர்களுக்கு படிப்படியாக டயாலிசிஸ் சிகிச்சை கொடுத்து காப்பாற்ற வேண்டும். பெனிசிலின் ஊசி போட்டால் அது ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு எப்படி அலர்ஜி ஏற்படுமோ அதுபோல் பாதிப்புகளை ஏற்படுத்தும். தஞ்சாவூரில் கூட ஒரு பெண் கதண்டு கடித்து உடல் முழுவதும் குழிப்புண் ஏற்பட்டு செப்டிக் ஆகி ஒரு மாதம் கழித்து இறந்துவிட்டார். எனவே கதண்டுகள் கூடு கட்டி இருக்கும் இடத்தில் நாம் தான் பாதுகாப்பாக இருந்து கொள்ளவேண்டும்" என்றார்.

- ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com