கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 42வது வார்டு பகுதியில் உள்ள குமரன் நகரில் பகுதி சபா கூட்டம் நேற்று நடைபெற்றது. மாமன்ற உறுப்பினரும் மண்டல குழு தலைவருமான ஜேபி என்கிற ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் அவர்கள் குடியிருந்து வரும் வ உ சி நகர், குமரன் நகர், ஜனகபுரி லே-அவுட், பசுமை நகர், கிருஷ்ணப்பா காலனி, செயின்ட் மேரிஸ் நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் எவ்விதமான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி தரவில்லை என்றனர். மேலும், குடியிருப்பு பகுதிகளில் முறையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் குப்பைகளை முறையாக அள்ளுவதில்லை என்றும் தெரிவித்தனர்.
எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பாக இந்த பகுதிகளில் ஏராளமான பாம்புகள் நடமாட்டம் உள்ளது என்று கூறிய பகுதி மக்கள், இரண்டு நாகப்பாம்புகள் அந்தப் பகுதியில் இருந்ததை பாம்பு பிடி வீரரை வைத்து பிடித்து கூட்டத்திற்கு கொண்டு வந்து காட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது போன்ற குறைகளை சீர் செய்ய வேண்டும் எனக்கூறி ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள தங்களுக்கு இந்த கூட்டத்தின் வாயிலாக பெறப்படும் மனுக்களுக்காவது உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- பொய்கை. கோ.கிருஷ்ணா