சீர்காழியில் அரசு மீன் விற்பனை நிலையத்தில் இறால் மீன்களை திருடிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தென்பாதி உப்பனாற்றங்கரையில் தமிழக அரசு மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள நவீன மீன் விற்பனை நிலையம் ஒன்று இயங்கிவருகிறது.
இந்த விற்பனை நிலையம் அமைக்கப்பட்டபோதே கருமாதி மண்டபம் அருகே மீன் விற்பனை நிலையமா? என்றபடி பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஆற்றின் கரைகளை ஆக்கிரமித்து இந்த மீன் விற்பனை நிலையம் அமைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் கடந்த 27ம்தேதி மேற்படி மீன் விற்பனை நிலையத்திலிருந்த மீன் தொட்டியில் விற்பனை போக மீதம் இருந்த ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள இறால் மீன்கள் மற்றும் கெண்டை மீன்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டதாக விற்பனை நிலைய உரிமையாளர் சிவக்குமார் சீர்காழி போலீசில் புகார் செய்துள்ளார்.
இது தொடர்பாக சீர்காழி போலீசார் மீன் விற்பனை நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சீர்காழி, சட்டநாதபுரம் வடக்குத் தெருவைச்சேர்ந்த செல்வகுமார் என்பவரும், ஈசான்யத்தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரும் கடந்த 27ம்தேதி மீன் தொட்டியின் பூட்டை உடைத்து அதிலிருந்த இறான் மீன்கள் மற்றும் கெண்டை மீன்களை திருடிச்சென்றது தெரியவந்தது. மீன்களை திருடிச்சென்ற இருவரும் அதனை கிராமப்பகுதிகளுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் இருவரையும் கைது செய்த சீர்காழி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே திருட்டு மீன்களை விலைக்கு வாங்கித் திண்றவர்கள் தங்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்வார்களோ? என்கிற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
-ஆர்.விவேக் ஆனந்தன்