பழிக்கு பழி வாங்கும் எண்ணம் ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, ஒரு தலைமுறையே சீரழித்து விடும் என்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அடிக்கடி ஜாதி தகராறுகள் நடந்து வருகின்றன. இதனால், மாறி மாறி கொலைகள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றச் செயல்கள் ஈடுபடுகிறவர்கள் 20 வயதுக்கு குறைவானவர்களாகவே அதிகம் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் சமூக ஒருங்கிணைப்பு கூட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் முன்னிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றம் இல்லாத மாவட்டமாக மாற்றுவதாகும்.
பெற்றோர்களாகிய நீங்கள் உங்களது குழந்தைகளின் சிறுசிறு தவறுகளை சுட்டிக்காட்டி கண்டித்து வளருங்கள். அப்போதுதான், உங்கள் குழந்தைகள் வருங்காலங்களில் சிறந்தவர்களாக வளரமுடியும்.
கோபத்தினால் குற்ற செயலில் ஈடுபட்டு சிறை செல்பவனை விட, தனது குடும்பத்திற்காக தன்னை கட்டுப்படுத்தி பிறரிடம் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருப்பவன்தான் உண்மையான வீரன் ஆவான்.
கோபப்பட்டு குற்ற செயலில் ஈடுபடுவன் அவனது எதிர்காலத்தை இழப்பதோடு அவனது குடும்பமும் பாதிப்படையும்.
இதனால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு நேர்மறையான சிந்தனைகளை வளர்க்க கற்று கொடுங்கள். உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் கோபத்தை குறைத்து நேர்மறையான எண்ணங்களை வளர்த்துகொள்ள உதவுங்கள்.
அப்போதுதான், சமுதாயம் நல்ல முறையில் வளர்ச்சியடையும். இளைஞர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். உங்கள் குழந்தைகள் எவ்வித சூழ்நிலையிலும் கல்வி பயில செய்யுங்கள். கல்வி ஒன்று தான் அவர்களுக்கு பெற்றோர்கள் அளிக்கும் மிகப்பெரிய சொத்தாகும்.
சி.சி.டி.வி கேமரா குற்றாவாளிகளை கண்டுபிடிப்பதற்கு உதவுவதோடு, குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கும் உதவியாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு நன்றி, மன்னித்து கொள்ளுங்கள் என்ற வார்த்தைகளின் அர்த்தங்களை கற்று கொடுத்து பிறரிடம் கூறவும் பழக்கப்படுத்துங்கள்.
நீங்களும் பிறரிடம் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி பாருங்கள், நமது சமுதாயம் எந்தவித பிரச்சினைகளும் இல்லாத மகிழ்ச்சியான சமுதாயமாக அமையும். நாம் அனைவரும், ஜாதி வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இருந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்" என்றார்.